அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Sunday, February 22, 2009

கோட்டகுப்பம் அப்துஸ் ஸமத் நத்வி ஹஸரத் காலமானார் தலைவர் பேராசிரியர் இரங்கல்

கோட்டகுப்பம், பிப்.22-

கோட்டகுப்பம் ரப்பானியா அரபிக் கல்லூரியில் தலைவரும், நாடறிந்த மார்க்க அறிஞருமான மவ்லானா மவ்லவி அப்துஸ் ஸமத் நத்வி ஹஸரத் 21-2-2009 சனிக் கிழமை இரவு 11.30 மணிக்கு காலமானார்.

மவ்லானா அப்துஸ் ஸமத் நத்வி சென்னை பல்லாவரம் மதரஸாவில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதெ மில்லத் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு அன்றிலிருந்து இன்று வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

சென்னை அஞ்சுமனே ஹிமாயத்துல் இஸ்லாம் பள்ளியின் ஆசிரியராக பணியாற்றியவர். மலேசியா ஈப்போவில் மதரஸாவை நிறுவி திறம்பட சேவையாற்றியவர்.

வானொலி மற்றும் இஸ்லாமிய பத்திரிகைகள் மூலம் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தவர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டில் ஹகாயிதெ மில்லத் விருது| வழங்கி கவுரவிக்கப்பட்டவர்.

மவ்லானா மவ்லவி அப்துஸ் ஸமத் நத்வி ஹஜரத் மறைவு குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது-

மவ்லானா மவ்லவி அப்துஸ் ஸமத் நத்வி ஹஜரத் அவர்கள் தமிழக உலமாக்களின் தனித்து ஒளிசிந்திய நட்சத்திரம் போல் விளங்கியவர். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவர்களான கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத், சிந்தனை செல்வர் சிராஜுல் மில்லத், இப்ராஹீம் சுலைமான் சேட், குலாம் மஹ்மூது பனாத்வாலா உள்ளிட்ட தலைவர்களுடனும் என்னுடனும் மிகுந்த நேசம் பாராட்டி ஆழமான அன்பும், பாசமும் கொண்டு விளங்கியவர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகும், ஜமாஅத் துல் உலமா சபையும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திய பெருமை ஹஜரத் அவர்களுக்கு உண்டு.

கோட்டகுப்பம் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியை நிறுவியதில் மிகப் பெரும் பங்காற்றியவர். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அக்கல்லூரியின் வளர்ச்சிக்காக மிகப் பெரும் பணியாற்றியவர்.

அவருடைய எழுத்தும், சொற்பொழிவுகளும் இஸ்லாமிய மார்க்கத்தின் பெருமையை நிலை நிறுத்தியதோடு அனைத்து சமுதாய மக்களையும் சன் மார்க்கத்தின்பால் ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்திருந்தது.

தமிழக அரபிக் கல்லூரி , மதரஸா கல்வி, மார்க்க கல்வி மக்கள் மத்தியில் சென்றடைய நத்வி ஹஜரத் போன்ற உலமாக்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர்.

ஆலிமின் மரணம் அகிலத்தின் மரணம் என்பர். அவரின் மறைவால் அறிவுலகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை அல்லாஹ் தன் கருணையால் நிரப்பிட அனைவரும் பிரார்த்திப்போமாக.

அன்னாரின் குடும்பத்தாருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்வதோடு அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவரும் பிரார்த் திக்க கேட்டுக்கொள்கின்றேன். ஜனாஸா இன்று (22-2-2009) இஷா தொழுகைக்குப் பின்னர் கோட்டகுப்பம் ஜாமிஆ மதரஸா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படு கின்றது.

No comments:

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template