மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எச். ஜவாஹிருல்லா, சீர்காழி வடகாலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:
இலங்கையில் நடைபெறும் ஈழத்தமிழர் படுகொலை உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. ராஜபக்சே அரசு ஈவு இரக்கமின்றி ரசாயன குண்டுகளை பயன்படுத்தி ஈழத்தமிழர் இனத்தை கொன்று குவித்து வருகிறது. தற்போது அறிவித்துள்ள இலங்கை ராணுவ போர் நிறுத்தம் நாடகமாகும்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். ராஜபக்சே செய்து வருவது போர் குற்றமாகும்.
ஈராக்கில் ரசாயன குண்டுகளை பயன்படுத்தி குர்து இன மக்களை கொன்று குவித்தவர் ஈராக் அதிபர் சதாம் உசேன். இதனால் குற்றம் சாட்டப்பட்டு சதாம்உசேனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதே போல் சற்றும் குறையாத வகையில் ராஜபச்சே தமிழர் இன மக்களை கொன்றுள்ளார்.
எனவே ராஜ்பக்சேவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இலங்கை ராணுவ போர் நிறுத்தம் என்பது காலம் கடந்த ஞான உதயமாகும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றதாகும். தற்போது வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு தனது மகள் திருமணத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்து வந்து விருந்து கொடுத்தவர்தான் மணி சங்கர் அய்யர். எனவே தமிழ் மக்களுக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தை தொகுதி மக்கள் மறக்க மாட்டார்கள்.
இலங்கை பிரச்சினையில் இதுவரை மவுனம் காட்டிய அ.தி.மு.க.வையும் இத்தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா பேசினார்.
பேட்டியின் போது மனித நேய கட்சி நிர்வாகிகள் முகமது இர்பான், முசாவூதீன், முகமது ஜுனபர், அசரப் அலி உள்பட பலர் இருந்தனர்
No comments:
Post a Comment