அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Sunday, September 28, 2008

திருக்குர்ஆன் மென் பொருளுடன் LG நிறுவனத்தின் டிவி அறிமுகம்!


உலகிலேயே முதன் முறையாக திருக்குர்ஆன் மென்பொருளை தன்னகத்தே கொண்ட தொலைக் காட்சிப் பெட்டிகளைத் தயாரிக்கிறது தென் கொரியாவின் பிரபல நிறுவனமான எல்.ஜி
இம்மாதம் முதல் சந்தைக்கு வரும் 42 இன்ச் மற்றும் 50 இன்ச் ப்ளாஸ்மா டிவிக்களில் இந்த மென்பொருள் நிறுவப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கின்றன.


ரமளான் மாதத்தில் உலகமெங்கும் இஸ்லாமியர்கள் திருக் குர்ஆனை ஓதுவதைக் கருத்தில் கொண்டு இந்த ரமளானில் 'குர் ஆன் டி.வி'கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.


இதன் மூலம் ஸி.டி, டி.வி.டி ப்ளேயர் போன்றவை இணைக்காமலும் கேபிள் டிவி, சாட்டலைட் / டிஷ் ஆண்டெனா போன்ற இணைப்பு ஏதுமின்றி வெறும் தொலைக்காட்சிப் பெட்டியைக் கொண்டே குர்ஆனின் அத்தியாயங்கள் மற்றும் அதன் வசனங்களைப் பார்வையிடவும் அழகிய குரலில் ஓதுதலைக் கேட்கவும் முடியும்.


160 ஜி.பி கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க் வசதி கொண்ட இந்த டி.வியில் இதற்கான மென்பொருள் டி.வியின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் விரும்பிய பக்கங்களைப் பார்வையிடவும், விருப்பமுள்ள இறை வசனங்களை சேமித்துக்கொள்ளவும் (Bookmark) தன்னகத்தே கொண்ட அகவசதிகள் செய்யப்பட்டுள்ளன.


டிஜிட்டல் புரட்சிக்குப் பின்னர் சர்வதேச அளவில் முஸ்லிம்கள், குர்ஆனை டிவிடி ப்ளேயர்களின் மூலமும், சாட்டலைட் சேனல்களின் மூலமும் பெருமளவு பயன்படுத்துவதைப் புள்ளிவிபரங்கள் மூலம் அறிந்து தனது வியாபாரத்தில் இந்தத் திட்டத்தினைப் புகுத்தியுள்ளது எல்.ஜி நிறுவனம்.


எல்.ஜி நிறுவனத்தின் எலக்ட்ரானிக்ஸ் பிரிவின் வைஸ் பிரஸிடெண்ட் திரு. பார்க் ஜோங்-சியோக் அவர்கள் இந்த டி.வியை அறிமுகப் படுத்துவதற்கான சிறப்புப் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் "சர்வதேச அளவில் முஸ்லிம்கள் இறை வேதமான குர்ஆனைத் தங்களது தினசரி வாழ்வில் ஓதி வருவதைக் கணக்கில் கொண்டே இந்தத் திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளோம்" என்கிறார்.

நன்றி
சத்தியமார்க்கம்

Monday, September 22, 2008

கடையநல்லூர் நகராட்சி வார்டு இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வெற்றி

கடையநல்லூர், செப். 20: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி 14- வது வார்டிற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஷாகுல்ஹமீது அதிமுக வேட்பாளர் ஷயிகுர்ரஹ்மானை விட 239 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த வார்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1467. இதில் ஆண் வாக்காளர்கள்-721. பெண் வாக்காளர்கள்-746. கடந்த 18-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 915. இதில் பதிவான ஆண் வாக்குகள் 324. பெண் வாக்குகள் 591. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சனிக்கிழமை காலை நடைபெற்றது. வாக்குப்பதிவு மின்னணு எந்திரத்தில் நடைபெற்ற காரணத்தால் சில நிமிஷங்களிலேயே முடிவுகளை நகராட்சி ஆணையர் அருணாசலம் அறிவித்தார். இதில் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் ஷாகுல்ஹமீது 577 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் ஷயிகுர்ரஹ்மான் 338 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

இதையடுத்து வெற்றிபெற்ற வேட்பாளர் ஷாகுல்கமீதுவிற்கு சான்றிதழை ஆணையர் அருணாசலம் வழங்கினார். இதில் உதவி வாக்குபதிவு அலுவலர் கரீம், கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் இப்ராஹிம், முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலர் செய்யது முகமது, நகர்மன்ற உறுப்பினர் அப்துல்காதர், நகரத் துணைச் செயலர் ஹைதர் அலி, திமுக நிர்வாகி முகமதுஅலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Monday, August 11, 2008

மேலும் 200 உலமாக்களுக்கு ஓய்வூதியம்

தமிழக முதலமைச்சர் கருணாநிதி மேலும் 200 உலமாக்களுக்கு ஓய்வூதியம் வழங்க அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து உலமா ஓய்வூதிய ஒப்பளிப்புக் குழு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

இதன் மூலம் ஒய்வூதியம் பெறுபவர் எண்ணிக்கை 2200லிருந்து 2400 ஆக உயர்கிறது. இதுகுறித்த அரசு அறிவிப்பு வருமாறு:-

உலமா ஓய்வூதிய ஒப்பளிப்புக் குழு கூட்டம் சுற்றுச்சூழல் துறை மற்றும் வக்ஃபு அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் இன்று காலை 11.00 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

முதற்கண் கூட்டத்தில் உலமா ஓய்வூதியர்களின் எண்ணிக்கையை 2200இலிருந்து 2400 ஆக உயர்த்தியதையடுத்து, அதிகப்படியாக 200 உலமாக்கள் ஓய்வ+தியம் பெற வழிவகுத்த தமிழக முதல்வர் டாக்டர் கலைஞருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உலமா ஓய்வூதியம் கோரி நிலுவையில் இருந்த 200 விண்ணப்பதாரர்களுக்கு உலமா ஓய்வூதியம் அனுமதிக்கப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மொத்தம் 2400 உலமாக்களுக்கு மாதம் ரூ.750 வீதம் அவர்கள் வாழ்நாள் வரையில் உலமா ஓய்வூதியம் வழங்கப்படும்.

கூட்டத்தில் எம்.எச்.சம்சுதீன், எம்.ஈ.ஜமாலுதீன் ஆகிய உலமா ஓய்வூதிய ஒப்பளிப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மைச் செயல் அலுவலரும், உலமா ஓய்வூதிய ஒப்பளிப்புக்குழுவின் உறுப்பினர் - செயலருமான ஏ.முஹம்மது ஜமாலுத்தீன் கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தாற்

Monday, August 4, 2008

ஹச் புனிதப் பயணத்திற்கு விண்ணப்பித்த அனைவருக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கவேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்


ஹச் புனிதப் பயணத்திற்கு விண்ணப்பித்த அனைவருக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கவேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் இருந்து இவ்வாண்டு ஹச் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக 11 ஆயிரம் பேர் மனு அளித்துள்ளனர். இவர்களில் 3 ஆயிரத்து 100 பேருக்கு மட்டுமே குலுக்கல் முறையில் அனுமதி கிடைத்துள்ளது.


குலுக்கல் முறையை அடியோடு கைவிட்டு விட்டு ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதி கிடைத்திடும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுகுறித்;து தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Monday, July 28, 2008

பாகிஸ்தானில் கையடக்கத்தொலைபேசியில் குர்ஆன்



பாகிஸ்தானில் யு போன் என்பது முன்னிலையில் இருக்கும் டெலிகாம் காம்பனியாகும். யுபோன் இணைக்கப்பட்ட கையடக்கத்தொலைபேசியில் குர்ஆன் கிராஅத், மற்றும் ஆங்கில, உர்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

GPRS வசதியுடைய கையடக்கத்தொலைபேசிகளில் இந்த (software) மென்பொருளை பதிவிறக்கம் செய்து தேவைப்படும் எந்த சூராக்களையும் அல்லது அதன் மொழிபெயர்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம்.

சிறிய திரையுடைய கையடக்கத்தொலைபேசியானது வசனங்களை வாசிப்பதற்கு போதிய வசதியில்லாமல் இருக்கலாம். வாடிக்கையாளருக்கு மாற்று வழியாக சொல்லை ஹைலைட் பண்ணும் போது தேவைப்படும் அத்தியாயம், பக்கம் அல்லது வசனத்தை தேடலாம்.

மொழிபெயர்ப்புப்பகுதியிலும் கூட இவ்வாறான வசதிகள் காணப்படுகின்றன்.
981 ற்கு sms பண்ணுவதன் மூலம் குர்ஆன் இணைப்பை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.

Friday, July 18, 2008

இந்திய விடுதலை போரின் முதல் அத்தியாயம் வேலூர் சிப்பாய் புரட்சி

1600 டிசம்பர்31: ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் நுழைந்து மூன்று கர்னாடகப் போர்களையும் நான்கு மைசூர் போர்களையும் நடத்தி தென்னிந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.

மலபாரிலிருந்து மேற்குத் தொடர்ச்சிமலை வரை 300 மைல் தூரமும் கிருஷ்ணா நதியிலிருந்து திண்டுக்கல் வரை 400 மைல் தூரமும் பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்து ஆங்கில அரசுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் மாவீரன் திப்புசுல்தான்.

கி.பி.1767 முதல் மகத்தான வெற்றிகளை பெற்றுவந்த திப்பு சுல்தான் கி.பி.1799இல் ஸ்ரீரங்கபட்டினத்தில் நடந்த நான்காவது மைசூர் போரில் நயவஞ்சகத்தால் வீரமரணமடைந்தார்.

திப்புவின் மரணத்தை வெறிக் கூச்சலிட்டுக் கொண்டாடிய ஆங்கிலேயர்கள் திப்புவின் 12 மகன்களையும் 8 மகள்களையும் வேலூர் கோட்டையில் சிறை வைத்தனர்.

அரசு நிர்வாகத்தை கிறிஸ்தவ மயமாக்க வேண்டும் என்ற அடிப்படையில் வெள்ளைய அரசு திட்டங்களை தீட்டியது.

அதன்படி ராணுவ வீரர்களும் ஐரோப்பிய சிப்பாய்களைப் போல் உடையணிய உத்தரவிடப்பட்டனர்.

இந்து வீரர்கள் நெற்றியில் திருநீறு அல்லது நாமம் போட தடுக்கப்பட்டனர். முஸ்லிம் வீரர்கள் தாடி வைப்பது தடைசெய்யப்பட்டது. அனைவரும் சிலுவை சின்னம் கொண்ட பட்டையை அணிய வற்புறத்தப்பட்டனர்.

எனவே ஆங்கிலேயே அதிகாரத்திற்கெதிராக மக்கள் மட்டுமின்றி சிப்பாய்களும் போராடத் துடித்துக் கொண்டிருந்தனர்.

சிறை வைக்கப்பட்டவர்களில் திப்புவின் மூத்தமகன் பட்டே ஹைதர் ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ச்சியைத் துவக்க திட்டம் வகுத்தார்.

1806 ஜூலை 13 கிளர்ச்சி துவக்கப்பட வேண்டிய நாள் என திட்டமிடப்பட்டது. ஆனால் ஓர் இந்திய வீரனின் உளறலால் வெள்ளையர்கள் சுதாரிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே கிளர்ச்சியை துவக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

1806 ஜூலை 9 அன்று துவங்கப்பட்ட கிளர்ச்சி ஜூலை 10 அன்று முழுவேகமடைந்தது.

ஆங்கிலேயருக்கு எதிரான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது. வெள்ளைய தளபதி கர்னல் பென்கோர்ட் ராணுவ அதிகாரிகள் மெக்காரஸ், மேஜர் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலேய சிப்பாய்கள் சொல்லப்பட்டனர். வேலூர் கோட்டை கைப்பற்றப்பட்டு அங்கு பறந்து கொண்டிருந்த ஆங்கிலேயர்களின் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு திப்புசுல்தானின் கொடி பறக்கவிடப்பட்டது.

திப்புவின் மூத்த புதல்வர் பட்டே ஹைதர் அரசராக அறிவிக்கப்பட்டார்.
வேலூர் கிளர்ச்சி திட்டமிடப்பட்ட நாளுக்கு முன்பே துவக்கப்பட்டதாலும் மைசூர், ஹைதராபாத்தும் ஒரே நேரத்தில் கிளர்ச்சியை துவக்காததாலும், இக்கிளர்ச்சியை அடக்க வெள்ளைய ஏகாதிபத்தியம் முழு பலத்தையும் வெடிபொருட்களையும் பயன்படுத்தியதாலும் வேலூர் புரட்சி தோல்வியில் முடிந்தது.

இப்புரட்சியில் 800 பேர் கொல்லப்பட்டனர் 600 பேர் கைதாயினர் ஏராளமானோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

வேலூர் புரட்சி தோல்வியில் முடிந்தாலும் முதல் சுதந்திரப்போர் என வர்ணிக்கப்படும் 1857ஆம் ஆண்டின் சிப்பாய் புரட்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த கிளர்ச்சியே வேலூர் புரட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம்! வேலூர் புரட்சிதான் இந்திய விடுதலை போரின் முதல் அத்தியாயம். மாவீரன் திப்பு சுல்தான் மட்டுமல்ல அவரது வாரிசுகளும் இந்திய தாய் மண்ணை உயிருக்கும் மேலாக நேசித்த தேசபக்தர்கள்.

வேலூர் புரட்சியின் 202ஆம் ஆண்டு நினைவு நாளில் இந்த மகத்தான தியாகத்தை நினைவு கூருவோம.

நன்றி: காயல் மஹபூப்
Template by - Abdul Munir | Daya Earth Blogger Template